Monday, April 7, 2014

அதிரப்பள்ளி சுற்றுலா - மார்ச் 30, 31 - 2014


உதிரம் குளிரும் அதிரப்பிள்ளி

ஊர் சுற்றும்குழு ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு முறை இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். இந்த ஆண்டு 2014ல் முதல் இடமாக கேரளாவுக்குப் பயணப்பட்டோம். நாங்கள் எல்லாம் ஒரு வாரப் பத்திரிகையில் வேலையிலிருப்பதால் பொது விடுமுறையில்தான் பயணப்பட வேண்டிவரும். அதனால் முன்னாலேயே விடுமுறை நாளை உத்தேசித்து திட்டமிட வேண்டும். எதிர்பாரா விதமாக விடுமுறை நாளில்  வேலை வைத்துவிட்டால் கேன்சல்தான். சுமார் 15 லிருந்து 20 பேர் குழுவாக அமையும். ஒவ்வொன்றும் ஒரு அவதாரம். டூர் எப்படி இருக்கும்? ஜாலிதான்.

மார்ச் மாதம் 29ஆம் தேதி கேரள மாநிலம்  திரிச்சூர் மாவட்டம் சாலக்குடியிலிருந்து 5 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ‘இந்தியாவின் நயாகரா’  என்றழைக்கப்படும் அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிக்குப் போனோம். பொதுவாக கேரளா என்றாலே சில்வென்ற குளிர் இருக்கும் என்று நாங்கள் பல பேர் போர்வையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் ஏமாந்து போனோம். அவ்வளவு வெக்கை. Silver Storm water theme park-ல்தான் அட்வான்ஸாக அறையை புக் செய்தோம். காலை டிபனை முடித்து விட்டு நீர்வீழ்ச்சிக்குப் போகும்வழியில் வழியில் தென்பட்டது ஒரு கள்ளுக்கடை. ஓரிருவரைத் தவிர அனைவரும் மூங்கில் தொன்னையில் (ஒரு லிட்டர்)  கள்ளுண்டோம். சைட்டிஸ் மாட்டுக்கறி. கப்பக்கிழங்கு புட்டு. ஆஹா மாட்டுக்கறிக்கு அதிரப்பிள்ளி டேஸ்ட் தனி ருசிதான். முயல் கறி இருக்கு. ரொம்ப நல்லாருக் கும் என்றார்கள். ஏனோ யாரும் ஆர்டர் செய்ய வில்லை. மலையாளிகள் அனைவரும் தமிழை நன்றாகப் பேசுகிறார்கள். தமிழகச் சுற்றுலாவினர்கள் அதிகம் வருகிறார்கள்.  அங்கு சில்லறைக்கு ரோம்பத் தட்டுப்பாடு. சில்ல றையாகக் கொடுக்காவிட்டால் சில்லறைத்தனமாகக் கத்துகிறார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள். ஒரு வழியாக 12 மணியளவில் நீர்வீழ்ச்சியில் கால் வைத்தோம். நயாகராவுக்கு ஒப்பான நீர்வீர்ச்சியில் குளிக்க முடியாது. வானத்திலிருந்து ஒழுகுவதைப்போல நீண்ட உயரத்திலிருந்து கொட்டுகிறது பேறிரைச்ச லுடன். அதனால் நீர்வீழ்ச்சி உற்பத்தியாகி ஓடும் இடத்தில் குளிந்தோம். வெறும் ஜட்டியோடுதான் எல்லாம் குளித்தோம். அப்படி குளிப்பதன் சுகமே தனிதான். கடும் பாறைகள் பல்லாண்டுக்கணக்கான நீர் ஓட்டத்தில் தேய்ந்து வழுவழுப்பாக இருந்தது. கடும் வெயிலுக்கு இதமாக இருந்தது தண்ணீர். நீருக்குள் பாதங்களைப் பார்த்து வைக்காவிட்டால் ஆழமான இடத்தில் கால் மாட்டிக் கடும் வலி ஏற்பட்டுவிடும். நண்பர்கள் இருவருக்கு அப்படி ஏற்பட்டுவிட்டது. பாவம் அன்றைய நாள் முழுவதும் நொண்டியே நடந்தார்கள். மாலை 5 மணி வரை நீர்க் குளியல் முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். இரவு வட்டமேஜை மாநாட்டில் சோம பானத்துடன் உணவு பரிமாறப்பட்டது. நல்ல திருப்தியான விருந்து. இரவு சிறு சலசப்புக்குப் பின் நித்திரை கலைந்தது.

கட்டன்சாயா கேரளாவுக்கே உரிய தேநீர்பானம். பால் கலக்காமல் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி கலந்திருப்பார்கள். வழக்கமான டீக்கு பதில் அந்தச் சுவை பிடித்திருந்தது.  ஒரு சிலரைத் தவிர அனைவரும் குடித்தோம். அங்கு எல்லோரும் காலையில் 2 வாழைப்பழமும் கட்டன்சாயாவும் சாப்பிடுகிறார்கள்.  ஆப்பமும் கடலைக்கறியும், முட்டைக்கறியும் காலை டிபன். சுமார் சுவை. நம்ம ஊர் (சென்னை) வழி வராது. வாழைப்பழ பஜ்ஜி வித்தியாசமானது. நீர்த் தடத்தில் குளித்துவிட்டு நீர்வீழ்ச்சிப் பார்க்கச் சென் றோம். அதற்குக் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் பள்ளத்தில் இறங்க வேண்டியிருந்தது. அதுவும் மிகவும் இறக்கமான பாதை. மண் மற்றும் கல் பாறைகள், மரஞ்செடிகளுக்கிடையே நடக்கவேண்டும். அல்ல, ஓட வேண்டும். கீழே போவது பெரிதல்ல, மேலே ஏறுவதுதான் கடினமானது. எங்கள் குழு ஒருவருக்கு வெயிலின் காரணமாகவும் உணவு சரியின்மையாலும் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டு மேலேயே தங்கி விட்டார். நல்ல வேளை, இல்லாவிட்டால் அவரால் ஏறுவது சிரமம்தான். ஒரு வழியாக அனைவரும் மேலேறி மதிய உணவை பால்ஸ் அருகிலேயே ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்தோம். சாப்பாடு, சப்பாத்தி, சிக்கன், மட்டன் என பல ஐட்டம். சோறு கனமான பெரிய அரிசி, சாப்பார், ஒரு பொரியல். அங்கே ஆப்பம் என்று கொடுத்ததை இவர்கள் தோசை என்ற பெயரில் கொடுத்தார்கள். அதற்கு அதே கடலைக்கறி. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து அறைக்குக் கிளம்பினோம்.

கேரளாவில் எங்கும் (99%) போதைப் பொருட் களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அதை அங்குள்ள கடைக்காரர்களும் மற்றவர்களும் கடைப்பிடிக்கிறார் கள். ஹான்ஸ், பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மது கூட உரிமை வாங்கி வைத்துள்ள எங்கோ ஒரு இடத்தில்தான். அதுவும் ஒருவருக்கு ஒரு பாட்டில்தான் வழங்கப்படுகிறது. மதுவின் வருமானத்தில் ஆட்சி நடத்தும் தமிழகத்தை நினைத்தால் வேதனைதான் மிஞ்சும்.30ம் தேதி காலை உணவுக்குப் பின் அதிரப்பிள்ளி யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள  வழிச்சல் நீர் வீழ்ச்சிப் புறப்பட்டோம்.

சாலக்குடி மலைப் பிரதேசம். அங்கு தொழிற்சாலையோ, விவசாயமோ பெரிய அளவில் இல்லை. பெரும்பாலான நிலங்களில் பாமாயில் எண்ணெய் எடுப்பதற்கு பாயில் மரம் பயிரிட்டு வளர்ந்திருக்கிறது. கேரளாவுக்குப் புகழ்பெற்ற தென்னை மரங்களே மிகவும் குறைவு. வறண்ட பகுதியில் சுவை உணவும் மற்ற வசதிகளும் எதிர்பார்ப்பது  தவறுதானே. நாங்கள் இருந்த பகுதியிலிருந்து வழிச்சல் நீர்வீர்ச்சிக்குப் போக வாகன வசதியில்லை. ஆட்டோவோ, வேனோ கிடைக்குமா என்று பார்த்தோம். கிடைக்கவில்லை. நடந்தே போகலாம் என்றால் 5 கி.மீ. நடக்க முடியாது. (அப் அன்ட் டவுன் 10 கி.மீ.) இரண்டு நாள் சுற்றிய களைப்பு வேறு. மீண்டும் அறைக்கு வரும் வழியில் பார்த்தால், அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சி வெள்ளமாக ஓடிக்கொண்டே இருக்கிறது வழி எங்கும். அங்கு ஒரு இடத்தில் நாங்கள் சிறு குழுவாகப் பிரிந்து இறங்கிக் குளித்தோம். ஆஹா அற்புதம். எங்களுக்காகவே அந்த நீர்வீழ்ச்சியின் ஓட்டம் அமைக்கப்பட்டதாகவே உணர்ந்தோம். அவ்வளவு அருமையான ஜல தியானம் செய்தோம். தலை மட்டுமே வெளியே உடல்கள் 

நீரில். வெளியே கடும் வெயில். உள்ளே குளிர். ‘மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போலே’ என்றாரே கவியரசர் கண்ணதாசன் அதுமாதிரியான ஒரு சுகானுபவம். நினைக்க நினைக்க இனிக்கும் நீர்க் குளியல். மூன்று மணிவரை நனைந்துவிட்டு நேரமின்மை காரணமாக அறைக்கு நதியைவிட்டு அகல மனமில்லாமல் கிளம்பினோம். அறைக்கு வந்து அவரவர் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம். மனம் அதிரப்பிள்ளியில்... உடல் சென்னையை நோக்கி... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் ஒலியில் கரைந்தது 
நீர்வீழ்ச்சியின் சல...சல...சல... இயற்கையில் சலங்கை ஒலி.

No comments:

Post a Comment