Friday, July 1, 2016

நண்பர்களின் சிறுசேமிப்பு - July 2016 - May 2017

TOTAL = Rs.27,500

(11 months - 2,500 = 27,500)

July 2016 August September October November December January 2017 February 2017 March 2017 April 2017 May 2017
Stephen 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Kathiravan 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Selva 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Gowri 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Bharath 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Vanarajan 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Thamarai 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Kanakappan 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Gopal+Gothandam 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Kumar+Hari 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500
Jaya Shree 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500 2,500

Friday, June 3, 2016

மூணாறு சுற்றுலா - August 14, 15. 2016

 Clik all photos
(to see all photos click on above photo)

மூணாறு காணக் கண் போதாது


மூணாறு தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண்கொள்ளாக் காட்சி.

உதகமண்டலம், கொடைக்கானலுக்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே வந்தார். அவர் பெயரில் உள்ள முன்றே என்பதே மருவி பின் நாளில் மூனாறு என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது, போதிய ஆதாரம் இல்லை.

இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை விவசாயத்தைத் தொடங்கினர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது.

தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதியில் பயணம் செய்ய கல்கி வார இதழ் அலுவலகப் பணியாளர்கள் 12 பேர் குழு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு அந்தக் குதூகலக் கொண்டாடத்துக்காகக் காத்திருத்தோம். அந்த நாளும் வந்தது. ஆம் ஆகஸ்ட் 13 சனி இரவு 10 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தோம். சரியாக காலை 5 மணிக்கு தேனியில் இறங்கி அங்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டு மூணாறு பஸ் பிடித்தோம். 10 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்து மலை ஏற்றத்தில் பல கொண்டை ஊசி வளைவு களைக் கடந்து போய் கொண்டிருந்தது. அந்த வேளையில் பெரும்பாலும் பயணிகள் உணவருந்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அடிக்கடி வரும் கொண்டை ஊசி வளைவும் மிகவும் குறுகியது. உடனே உடனே பேருந்து திரும்பி திரும்பி மலையில் ஏறுவதால் குடல்கள் புரண்டு வயற்றைக் கலக்கிவிடும்.

நாங்கள் காலையில் உணவருந்திவிட்டு சென்றதால் சிலருக்கு கொஞ்சம் வயிற்றைக் கலக்கியிருக்கும். நல்ல வேளையாக மலையில் பாதி தூரம் சென்றதும் டிராப்பிக் ஜாம் ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தாமதமாகிவிட்டது. இருந்தாலும் அதுவும் புது அனுபவமாக இருந்தது. இருவரைத் தவிர நாங்க அனைவரும் பேருந்திலிருந்து இறங்கி மிதமான குளிரில் நடந்தோம். வாகனங்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டிருந்தன.

ஓங்கி வளர்ந்த மலைகள், குகைகள், செடிகள், மரங்கள், பூக்கள், மலைமண் வாசனை எல்லாம் சேர்ந்து எங்களை புது உலகத்துக்கு அழைத்துச்சென்றது. தினம் தினம் ஒரே வேலை, பரபரப்பான வாழ்க்கையில் இந்தப் பயணம் புது சுகம் தந்தது. அலுவலக நாற்காலி தரத்தை மறந்து, சீனியாரிட்டி சுப்பீரியாரிட்டி மறந்து உடன் பிறந்த தோழர்களைப்போல நாங்கள் கைகோர்த்து, அதோ அங்கு பார், இதோ இங்கு பார் என்று சிறு பிள்ளைகளாக கூக்குரலிட்டு சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தோம். அதற்குள் கொஞ்சம் டிராப்பிக் ஜாம் குறையவே பேருந்தில் ஏறிப் புறப்பட்டோம். மத்தியம் 3 மணி வாக்கில் மூணாறு அடைந்தோம்.

நான்கு பக்கமும் குவிந்த மலைக்கு நடுவில் சம தளத்தில் சிறிய ஊர். எல்லாரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். இங்கு தமிழர்களே அதிகம். இந்தியாவைவிட்டு வெள்ளையன் வெளியேறிய போது சுதந்திரத்துக்குப்பின் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது ஆந்திரர்கள் சென்னையை கைப்பற்ற நினைத்தார்கள். தகுந்த ஆதாரங்களோடு ம.பொ.சி. மற்றும் திரு.வி.க. ஆகியோர் போராடினார்கள். சென்னையை விட்டுவிட்டு ஏர்ப்போர்ட்டை கைப்பற்ற ஆந்திரர்கள் போராடினார்கள். ஏனென்றால் ஆந்திராவில் பெரிய தொழில் நிறுவனம் எதுவும் இல்லையாம். அப்போது திருப்பதியா? சென்னை ஏர்போர்ட்டா? ஏதாவது ஒன்றைத்தாருங்கள் என்று வலியுறுத்தினார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னே ஒரு குழு திருப்பதியை கைப்பற்றி முருகனைத் திருமாலாக்கி பிறகு அவருக்கும் வேஷம் போட்டு பாலாஜியாக்கிவிட்டார்கள். திருப்பதியைக் கட்டியது தமிழ் மன்னன்தான். சுவர்களில் தமிழ் பெயர்கள் இருப்பதை இன்றும் பார்க்கலாம். அப்போது தமிழகத்தில் போராட நாதியில்லை. திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. ஓரிருவராகப் போராடியதால் திருப்பதி பறிபோனது. இன்னொரு பக்கம் கேரளம், தமிழக எல்லையான தமிழர்கள் அதிகம் பூர்வீகமாக வாழ்ந்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எங்களுக்குச் சொந்தம் எனப் போராடி பிடுங்கிக்கொண்டது. அதையும் தட்டிக்கேட்க தமிழகத்தில் நாதியில்லை. அந்தப் பகுதிக்குத்தாம் நாங்கள் போயிருந்தோம்.

அங்கு கால்வைத்ததும் இந்த நினைவுகள் வந்தன. மார்க்கெட் தெருவில் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் புறப்படுவதற்கு முன்னாலேயே அந்த லாட்சில் தங்கும் கட்டணம் பேசப்பட்டது. நாங்கள் தெரிந்தவர் மூலமாக அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்று அஜாக்கிரதையாக இருந்தோம். ஆனால் நடந்தது வேறு. போனில் பேசியபோது 3000 ரூபாய் வாடகை பேசியவர்கள் நேரில் சென்றதும் 5000 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். பயணக் களைப்பு, வயிற்றுப் பசி, பிசுபிசு மழை எல்லாம் சேர்ந்து எங்களைச் சோர்வடையச் செய்துவிட்டது. அனைவரும் ரூமில் தங்கி ஒரு குட்டிப் பயணம் செல்லத் திட்டமிட்டோம். ஆனால் 5 மணிக்குமேல் வாகன ஓட்டிகள் வரத் தயங்கினார்கள். அதனால் அனைவரும் திருப்தியாக உணவருந்திவிட்டு இரவு அனைவரும் கூடி இரவு முழுக்கப் பேசி சிரித்து அரட்டை அடித்து உள்ளத்தில் உள்ளதை யெல்லாம் கொட்டித் தீர்த்து முடிப்பதற்குள் நடுநிசி ஆகிவிட்டது. மறுநாள் மாலையே குழுவில் ஒரு பகுதியினர் வீடு திரும்பவேண்டி ரயில் புக் செய்ததால் ஒரு குட்டிப் பயணம் செய்து சில இடங்களைப் பார்வையிட்டோம்.

எங்களின் பயணத்தில் முதலில் சென்றது view point. பாதையில் செல்ல செல்ல, காடுகள் மறைந்து தேயிலை தோட்டங்கள் வரவேற்கத் தொடங்கியது. காணக் கண் கோடிகள் போதாது.

சுற்றுலா தளங்களில் பொருட்களின் விலை அதிகம் என்பதால், ஒன்றும் வாங்கவில்லை. மூணாறிலிருந்து 11கி.மீ. தொலைவில் உள்ள மாடுப்பெட்டி அணையை முதலில் காணச் சென்றோம். மாடுப்பெட்டி அணையின் மற்றுமொரு சிறப்பு, நீர் மின் நிலையம். இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கம். இந்நீர்த்தேக்கத்தில் ஆண்டு முழுவதும்நீர் இருப்பதால் யானை முதலிய காட்டுயிர்கள் நிறைந்து காணப்படுகின்றன. மாடுப்பெட்டி அணையின் முடிவில் “Echo Point” அமைந்துள்ளது. அங்கு நின்று அவரவர்களுக்கு பிடித்த நபர்களின் பெயரால், ஏற்படும் எதிரொலி கேட்டு மகிழ்ந்தோம். மாடுப்பெட்டி அணை சுமார் ஆறு கி.மீ. அளவிற்கு நீண்டுள்ளது. யானை மற்றும் படகு சவாரி செய்யும் வசதி உள்ளது.

அடுத்து நாங்கள் சென்ற இடம் குண்டாடா அணை. இதுவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. எனக்கு மாடுப்பெட்டி அணையை விடவும் இந்த அணைதான் பிடித்தது காரணம், குறைவான கூட்டம் மற்றும் கடைகள்.

படகு சவாரிக்கும் சிறந்த இடம். பெடல் போட்டில் ஒருமணி நேர பயணம் செய்யும் போதுதான், இயற்கையை எவ்வளவு நாம் கெடுத்து வைத்துள்ளோம் என்பது புரியும்.

குண்டாடா அணையிலிருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் பாதைதான் மூணாறில் எனக்குப் பிடித்த இடம். தேயிலை தோட்டங்கள், அவற்றைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்கள் எனக் கண்கொள்ளாக் காட்சி கண்முன் விரிகிறது. நண்பகல் நேரம். ஆனால் அதற்குண்டான வெயில், வெப்பம், எதுவும் இல்லாமல் இதமான சூழலே அழகு நடம் புரிந்தது. அதனால் அங்கு ஒரு போட்டோ சூட் நடத்தாமல் எப்படி மேலே போகமுடியும்? 1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் மலைமேல் உள்ள தெய்வங்களின் சாட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

எல்லாவற்றையும் கண்டுகளித்து எர்ணாகுளம் ரயில் நிலை யத்துக்குப் புறப்பட்டோம். போகும்போது லோக்கல் கேரள பேருந்தில் ஏறிய தால் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் சிறிய சீட்டில் அமர்ந்து அனைவரும் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். அந்தப் பேருந்து கேரளத்தின் ஒரு பகுதியைச் சுற்றிக் காட்டியது. அங்கு ஒரு விசேஷம் எந்த இடத்திலும் பேருந்து உட்பட மலையாளத்தைத் தவிர வேறு மொழிகளில் ஏன் ஆங்கிலத்தில்கூட பெயர் பலகைகள் இல்லை. அவர்களிடம் கேட்டாலும் மலையாளத்திலேயே பரைக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை நினைத்துக்கொண்டோம்.

ஒரு வழியாக ஆறு மணிக்கு எர்ணாகுளம் வந்து அங்கு ஒரு தங்கும் விடுதியில் அனைவரும் மூன்று அறைகளில் தங்கி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு கிளம்பி உண வருந்தச் சென்றோம். கேரளாவில் பிரியாணி வெள்ளையாகவே உள்ளது. சென்னையைப் போல மசாலா கலந்து செந்நிறத்தில் இருப்பதில்லை. சில கடைகளில் பிரியாணி உள்ளே மசாலா வைக்கிறார்கள். எல்லாம் காரசாரம் இல்லாதவை. கேரளாவில் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் பீப் பிரைதான். அடுத்து கட்டஞ்சாயா, கொண்டைக்கடலை புட்டு. கேரள சேச்சிகள் சேட்டன்கள்.

இப்போது மூணாறு வரலாற்றைப் பார்ப்போம்.



இன்று இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதி என உலக அளவில் பிரசித்து பெற்றுள்ள மூணாறு, 90 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக அழிந்து, பின் புது ஜென்மம் எடுத்துள்ளது. இது பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பி ல்லை.

கடந்த 1924 ஜூலை 6ம் தேதி முதல், ஒன்பது நாட்கள் பகலும், இரவும் இடை விடாமல் பெய்த பேய் மழையினால், நகர் மட்டும் இன்றி, சரக்குகளை கையாளுவதற்கு அமைக்கப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த ரயில் பாதைகள், 'ரோப் வே' போன்றவைகள் அழிந்தன.

மூணாறு பகுதிக்கு பூஞ்சார் ராஜா மற்றும் ஆங்கிலேயர் போன்றோர் வரும் முன், இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்கள் பாண்டியர், -சோழர் மன்னர்களிடையே நடைபெற்ற போரின்போது, மதுரையில் இருந்து தப்பி வந்த வம்சாவளியை சேர்ந்தவர்கள். மலை வாழ் மக்கள் வசம் இருந்த மூணாறு, அஞ்சுநாடு பகுதிகளை 1252ல் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் தங்கள் வசமாக்கினர். 100 ஆண்டுகள் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினார். இப்பகுதிக்கு வழிகாட்டியாக அமைந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த கண்ணன், தேவன் ஆகியோரின் நினைவாக, 'கண்ணன்- தேவன் ஹில்ஸ்' என இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.

மைசூர் திப்பு சூல்தான் மன்னர், திருவிதாங்கூர் மீது படையெடுத்த காலத்தில், ஆங்கிலேயர்கள் முதன் முறையாக மூணாறுக்கு வந்தனர். மதுரையில் இருந்து ஆங்கில படைகளுக்கு தலைமை வகித்து வந்த கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி 1790ல், கம்பம்மெட்டு வழியாக மூணாறுக்கு வந்தார். ஆங்கிலேயர்களின் வருகை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சவாலாக விளங்கிய திப்பு சுல்தான் மன்னனை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டிருந்தனர். யுத்தத்திற்கு பிறகு திப்பு சுல்தான் மைசூருக்கு சென்று விட்டபோதிலும், ஆங்கிலேயர் மூணாறை விட்டு செல்லவில்லை.

பூஞ்சார் ராஜாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில், ஆங்கிலேயர்கள் தேயிலை விவசாயத்தை தொடங்கினர். முதன் முறையாக 1880ல், ஆங்கிலேயர் ஏ.எச். ஷார்ப் தேயிலை செடிகளை நட்டார். அதன் பின்பு இங்கு நிலவிய இயற்கை எழிலில் மயங்கிய ஆங்கிலேயர்கள் பல தலைமுறைகளாக தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்தனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். திருச்சியில் சிறப்பு மையம் அமைத்து, ஆட்கள் தேர்வு நடந்தது.
இவர்களின் உழைப்பால், மூணாறு நகர் உருவாகியது.மூணாறை, சுற்றிலும் 16 தேயிலை தொழிற்சாலைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். தேயிலை உள்ளிட்ட சரக்குகளை கையாளுவதற்கு, பிரிட்டனில் இருந்து 500 காளை மாடுகளையும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு டாக்டர் இடம்பெற்ற மூன்று பேர் குழுவை அழைத்து வந்தனர். தேயிலைத் தோட்டங்கள் அதிகரித்து, உற்பத்தி உயர்ந்ததால், காளை மாடுகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் சரக்கு களை கையாள இயலாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். கடந்த 1902ல் ரயில்கள் ஓடத் தொடங்கியது.

மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி, குண்டளை வழியாக தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லையான 'டாப் ஸ்டேஷன்' வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை டாப் ஸ்டேஷன் வரை ரயிலிலும், அங்கிருந்து 'ரோப் வே' மூலம் போடிக்கும் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து துாத்துக்குடி துறை முகம் வழியாக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மூணாறில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது. ஆங்கி லேயர்கள் அமைத்த ரயில் மற்றும் 'ரோப் வே' போன்றவை உலக அளவில் சிறந்ததாக திகழ்ந்தது. ரயில் வசதி தொடங்கி 5ம் ஆண்டில், டெலிபோன் வசதி ஏற்படுத்தப்பட்டது.

90 ஆண்டுகளுக்கு முன் 1924ம் ஆண்டு ஜூலை மாதம், 6ம் தேதி முதல் 24ம் தேதி வரை, கேரளா முழுவதும் கன மழை பெய்தது. அப்போது மூணாறில் 9 நாட்கள் பகலும், இரவும் இடைவிடாமல் பெய்த பேய் மழையினால், மலைகளில் இருந்து பெருக்கெடுத்த நீர், பிரளயத்தை ஏற்படுத்தியது. கரை புரண்டு ஓடிய தண்ணீரால், மூணாறு நகர் உள்பட 10 கி.மீ., சுற்றளவு நீருக்குள் மூழ்கியது. மலை மீது அமைந்துள்ள நகர் என்ற கர்வம் அழிந்து, மூணாறு முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உருத் தெரியாமல் அழிந்தது. நகர் மட்டும் இன்றி, சரித்திர புகழ் வாய்ந்த ரயில்வே ஸ்டேஷன், ரயில் பாதை மற்றும் பாலங்கள், 'ரோப் வே' மற்றும் டெலிபோன் மற்றும் மின் கம்பங்கள், ரோடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் காணாமல் போயின.

தண்ணீர் வற்றுவதற்கு இரண்டு வாரங்கள் ஆனது. நீர் ஓட்டத்தினால், ஆறுகளின் போக்கு மட்டும் இன்றி, ரோடு மார்க்கமான வழித் தடங்களும் மாறின. அதன் பின் கட்டடங்கள், ரோடுகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய மூணாறு உருவாக்கப்பட்ட போதிலும், ரயில் சேவை, 'ரோப் வே' போன்றவைகள் சீரமைக்க இயலாமல் அழிந்து விட்டன. ரயில்கள் இயக்கப்பட்டதற்கு அடையாளங்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் உள்ளன. இவை ரயில் பாதையாக அல்ல, ரயில் தண்டவாளங்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட மின் கம்பங்களாக காட்சியளித்து வருகின்றன. மூணாறுக்கு அழிவை ஏற்படுத்தியபோது, ஜூலையில் மட்டும் 485 செ.மீ., மழை பெய்ததாக ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டுள்ள வரலாற்று புத்தகங்கள் சாட்சியளிக்கின்றன.

கன மழைக்கு நுாற்றுக்கணக்கானோர் இறந்தனர். பலரது உடல்கள் கட்டடங்களுக்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டன. வீடுகளும், கால்நடைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப் பெருக்கின்போது, மூணாறில் கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் பலியான நிலையில், அதிர்ஷ்டவசமாக 19 வயது பெண்ணும், 6 வயது சகோதரரும் உயிர் தப்பினர். தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், எஞ்சிய அவர்களும், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும், மூணாறு மீண்டது தனி வரலாறு.

ஒருவழியாக 12 பேர் குழுவில் ஆறு பேர் மட்டும் அலுவலகம் திரும்ப வேண்டிய சூழ்நிலை. எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட லிஸ்டில் நான் இருந்தேன். மீதி ஆறு பேர் எர்ணாகுளம் ஆர்பாருக்குப் போர் அங்குள்ள குட்டித்தீவுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். நாங்கள் ஆறு பேர் இயற்கை சுவாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பெட்ரோல் புகை சுவாசத்தை சுமந்துகொண்டு அலுவலகம் வந்தோம். மீண்டும் பரபரப்புப் பற்றிக்கொண்டது.

இன்னொரு சுற்றுலா எப்போது? மனம் ஏங்கியது. அடுத்த அரசு விடுமுறை சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் அமைந்தால்தான். காத்திருப்போம்.

Wednesday, August 19, 2015

பார்சன் வேலி - ஆகஸ்ட் 15, 16 - 2015

<<<< Click on Photo to see all images >>>

 Parson Valley

பார்சன் வேலி

டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன், செல் : 9344773499

இயற்கைக் காட்சிகள் நிறைந்த உலகச் சிறப்பு மிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள இடங்களில் ஒன்றுதான் பார்சன் வேலி. அடர்ந்த இயற்கைக் காடுகளைச் சுற்றிலும் கொண்டு பல விதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்களைக் கொண்டு விளங்குகிறது . தூய்மையான காற்றினைக் கொண்டுள்ளது. பனிபடர்ந்த மேகக் கூட்டத்தினையும் கொண்டு எழில் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஆங்கிலேயப் பொறியாளர் பார்சன் ஹட்சன் என்பவர் 1862 இல் இந்த அழகான இடத்தைத் தேர்வு செய்து பாதை அமைத்து வழி ஏற்படுத்தித் தந்ததால் அவரது பெயரால் பார்சன் வேலி (Parson Valley) என அழைக்கப்படுகிறது.

குளிர் காலங்களில் மிகுந்த குளிரினையும், மழைக் காலங்களில் மிகுந்த மழையினையும், வெப்ப காலங்களில் குறைந்த குளிரினையும் கொண்ட சூழலைக் கொண்டு விளங்குகிறது.

கோயமுத்தூர் அல்லது ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று ஊட்டியை அடைய வேண்டும். ஊட்டியில் மாவட்ட வன அதிகாரியிடம் அனுமதி பெறுதல் வேண்டும். செல்ல வேண்டிய இடம், தங்கும் இடம், வழிகாட்டி போன்றவற்றிற்கு அனுமதிக் கடிதம் பெற்று செல்ல வேண்டும். இல்லையெனில் உள்ளே வனத்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள். மாலை அல்லது இரவு வேளையாயின் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரும்.

பார்சன் வேலியானது ஊட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எழில்மிகு காப்புக்காடாகும் (Reserved Forest), போகும் வழியின் இரு பக்கமும் அடர்ந்த காடும் சிறு சிறு நீரோடைகளும் கண்டு கடந்து செல்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகும். காட்டெருமைகள் (Fearl Bufflalo), கலைமான்கள் (Sambar Deer) காட்டு மாடு (Gaur) சில வேளைகளில் சிறுத்தை போன்றவற்றை வழியில் ஆங்காங்கே காணலாம். இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதியாக விளங்குவதால் ஒளிப்படம் எடுப்பவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்களுக்கும் ஏற்ற இடமாகும்.

தோடா பழங்குடி மக்களையும், வேளாண்மை நிலங்களையும் பார்சன் வேலியின் சுற்றுப்பகுதிகளில் காணலாம். பார்சன் பள்ளத்தாக்கு செல்லும் வழியில் போர்த்துமண்டு அணை (Porthimund Dam), முக்கூர்த்தி ஏரி போன்றவற்றினைக்கண்டு இன்புற லாம். பார்சன் பள்ளத்தாக்குப் பகுதியில் பல நீரோடைகளும், சிறிய நீர் வீழ்ச்சிகளும் அமைந்துள் ளன. இவை காண வேண்டிய பகுதியாகும்.

இப்பகுதியில் பைன் மரங்கள் (Pine Trees) ஆங்காங்கே அடர்த்தியாகப் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலும், திறந்த வெளிகளிலும் அமைந்து எழில் மிக்க இயற்கைக் காட்சியாகத் தோற்றமளிக்கிறது.

பார்சன் வேலி நீர்பிடிப்புப் பகுதி 202 ஹெக்டேர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 2196 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. ஊட்டி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள கிராமங்களுக்கு இங்கிருந்துதான் குடிநீருக் கான நீர் அனுப்பப்படுகிறது. தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் ஏரி நிரம்பிவிடும்.

வனத்துறையின் ஓய்வு இல்லம் இங்குள்ளது. மேலும் சுமார் 30 பேர் தங்கும் அளவிற்கு பெரிய அறை ஒன்றும் உள்ளது, நடந்து மலை ஏறுபவர்கள் (Trecking) எண்ணிக்கையில் அதிகம் பேர் இருப்பின் ஓய்வு இல்லத்தின் முன் திறந்த புல் வெளியில் கூடாரம் அமைத்து தங்கவும் அனுமதிக்கின்றனர். கூடாரம் ஊட்டியில் வாடகைக்கு கிடைக்கிறது.

முக்கூர்த்தி தேசியப் பூங்காவின் ஒரு பகுதிதான் பார்சன் வேலி. பாண்டியாற்றின் சரிவில் அமைந்துள்ளது. செல்லும் வழியில் சிறிய நீர் வீழ்ச்சிகள் பலவும், நீர் தேக்கங்கள், பல வகையான பறவைகள், உயிரினங்கள் காணக் கூடிய பகுதியாக விளங்குகிறது. மலை ஏறுபவர்கள் வழிகாட்டிகளை உடன் அழைத்துக்கொண்டு சுற்றியுள்ள பல இடங்களுக்கு குறிப்பாக ஊட்டியிலிருந்து பார்சன் வேலிக்கும், இங்கிருந்து முக்கூர்த்தி மலைச் சிகரத்திற்கும் நடந்து செல்லலாம். ஏப்ரல் - ஜூன் மற்றும் செப்டம்பர் - டிசம்பர் மாதங்கள் நடந்து மலை ஏறுபவர்களுக்கு ஏற்ற மாதங்களாகும்.

நடந்து செல்லும்பொழுது பலவிதமான காட்டுயிர்களைக் காணலாம். அவற்றில் கருங்குரங்கு, காட்டுப் பூனை, செங்கீரி (Ruddy Mongoose), காட்டெருமை (Fearl Buffalo), காட்டுமாடு (Gaur), கலைமான் (Sambar), சிறுத்தை மற்றும் சில நேரங்களில் புலி போன்ற வைகளையும் (இப்பகுதிகளில் யானையினைக் காண்பதென்பது மிகவும் அரிது. எப்போதாவது தான் இப்பகுதிகளுக்கு வருகிறது.)

பறவைகப்ளில் நீர் நிலைகளில் நீர் காகம், வெள்ளைக் கொக்கு போன்றவைகளும் நீலகிரி பூங்குருவி (Scally Thrush), வெள்ளைக் கண்ணி (Oriental White), கருப்பு சின்னான் (Black Bulbul), சிவப்பு மீசைச் சின்னான் (Red & whiskerd Bulbul), சின்னான் (Red & vented Bulbul), தேன் சிட்டு, தகைவிலான் (Swallow) போன்ற பறவைகள் எப்பொழுதும் காணக் கூடியவைகள். வலசை வரும் பறவையான காஷ்மீர் ஈ பிடிப்பான் போன்றவைகளையும் சில காலங்களில் காணலாம்.

மழைக்குப்பின் ஆர்கிட் பூக்கள் தோன்றியிருக்கும் பகுதிகளுக்கு இவை பற்றி தெரிந்தவர்களை உடன் அழைத்துச் சென்றால் எளிதில் காணலாம். மற்றும் அழகிய வண்ணப் பூக்கள் சில ஒன்று சேர்ந்தும் சில வகைப் பூக்களை ஆங்காங்கே காணலாம். பல வகையான காளான்கள், அவற்றில் சில காண்பதற்கு அழகிய வண்ணங்களில் தோற்றம் அளிந்த்தாலும் விசத்தினைக் கொண்டிருக்கும். உணவுக்கு ஏற்றதல்ல.
மழைக்காலங்களில் அட்டைப் பூச்சிகள் (Leech) அதிகளவில் இருக்கும். கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும். காரணம் இவை உடலில் இரத்தத்தைக் குடிப்பதற்காக கடிக்கும். இதனை நம்மால் உணர முடியாது. இரத்தத்தைக் குடித்து முடித்தபின் அவ் விடத்திலிருந்து இரத்தம் வடிவதைக் கொண்டுதான் உணர முடியும்.

பார்சன் வேலி பகுதிகளிலிருந்து 30 கி.மீ சுற்றள வில் பார்க்கக்கூடிய இடங்கள் அப்பர் பவானி, எமரால்டு, அவலான்சி, போத்தி மண்ட், முக்கூர்த்தி போன்ற ஏரிகளும், திறந்த புல்வெளிப் பகுதியும் மற்றும் நீர் தேக்கம் கொண்ட வெஸ்டேன் கேட்ச் மென்ட், முக்கூர்த்தி சிகரம் குறிப்பிடத்தக்கதாகும் இப்பகுதியில் வரை ஆடு (Nilgiri Tahr) களைக் காணலாம். தற்போது முக்கூர்த்தி மற்றும் வெஸ்டேன் கேட்ச் மென்ட் பகுதிகளுக்கு வனத்துறையினர் அனுமதி கொடுப்பதில்லை. சிறப்பு அனுமதி பெற்றால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

இப்பகுதியில் அமைந்துள்ள புல் வெளிகள் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரினை சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால் (ஸ்பான்சு போன்று) வெப்ப காலங்களில் சேமித்து வைத்திருக்கும் நீரினை சிறிது சிறிதாக வெளியேற்று வதால் அப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் ஆண்டு முழுவதும் நீர் ஓடுவதற்கு முக்கிய காரண மாக இப் புல்வெளிப் பகுதிகள் விளங்குகின்றன. இவ்வழகு நிறைந்த இப்பசுமைக் காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு ஆண்டு முழுவதும் பயணிக்கலாம். இப்பகுதி முழுவதும் தூய்மை நிறைந்ததாகும். எனவே இப்பகுதிகளுக்குச் செல்பவர்கள் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் பொருள்களையும், பாட்டில்களையும் உற்சாகக் களிப்பில் திகழ்வதற்காக மது அருந்துவதையும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

நன்றி : படங்கள், கட்டுரை : ஒளிஓவியர் திரு. அருந்தவச்செல்வன்

Tuesday, January 27, 2015

வேடந்தாங்கல் (25.01.2015) ஒரு நாள் சுற்றுலா

உங்க நாக்குல உப்பு இருக்கா? ஊர் சுற்றும் குழுவின் 2015 ஜனவரி மாதம் சென்ற சுற்றுலா ஜாலி சிற்றுலாவாக அமைந்தது. காரணம் கேரள அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிக்கு போய்வந்து (2014 மார்ச்) பல மாதங்களுக்குப் பிறகு வேடந்தாங்கலுக்குப் போனோம் என்பதால்.

மலையை உடைத்துவிடலாம், பெரும் பள்ளம் தோண்டிவிடலாம். உடல் களைப்பில் மனம் அடங்கி விடும். ஆனால் எழுத்தைப் படித்தாலோ, கணினியில் அடித்தாலோ அந்த எழுத்துக்களை வடிவமைப்புக்குள் அடைத்தாலோ மூளை சோர்ந்துவிடும். ஒரே பணியைத் திரும்பத் திரும்ப செய்வதில்தான் களைப் பும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. மனம் ரணமாகி விடுகிறது. அதற்கு மருந்திட்டு மயிலிறகால் வருடும் ஔடதம்தான் இதுபோன்ற சிற்றுலாக்கள்.

நாங்களெல்லாம் பிரபல பாரம்பரியப் பத்திரிகை யில் பணியாற்றுபவர்கள். தொடர்பணியில் இடர் நீங்க, இளைப்பாறப் பயணிக்கும் தேனீக்கள்.

சிற்றுலாவுக்கு ஏற்ப ஏழு பேர்கள் ஒரு மகிழுந்தில் 24ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை பயணித்தோம். அன்று இரவு வனதுறைக்குச் சொந்தமான பிரம்மாண்ட அறையில் தங்கினோம். வேலையி லிருந்து நேரே சென்றதால் பணி களைப்பும் பயணக் களைப்பும் தீர ஆடை களைந்து பதவி, தகுதி, சீனியாரிட்டி, சுப்பீரியாரிட்டி களைந்து நாமெல்லாம் ஜாலி பண்ண வந்திருக்கிறோம் என்ற நினைப்பில் ஆட்டம் போட்டோம்.

இரவு விருந்துக்கு போன்லெஸ் சிக்கன், சப்பாத்தி, தோசை எல்லாம் ஸ்பெஷல் ஆர்டரில் தருவிக்கப் பட்டது. அப்புறம் என்ன, பல(ம)õன உணவுக்குப்பின் பேச்சுக் கச்சேரிதான். உலகத்தில் மேலிருந்து கீழ்வரை பேச்சு போனது. அதோடு நிற்வில்லை. மேடிலிருந்து பள்ளம் வரை பேச்சு போனது. அதோடும் நிற்க வில்லை. தலை முதல் கால் வரை பேச்சு போனது. அதோடும் நிற்கவில்லை. மேலிருந்து கீழ்வரை பேச்சு போனது. அதோடு நின்றதா? இல்லை... இல்லை.. கீழே கீழே கீழே போய்... நாக்கில் உப்பு இருக்கா என்கிற உப்பு ஆராய்ச்சிவரை போனது. வஞ்சனையில்லா வார்த்தையால் சிரிப்பொலி பல ராக ஆலாபனைகளையும் மிஞ்சும் அளவுக்குப் போனது.

நின்றவர் நின்ற நிலையில்... அமர்ந்தவர் அமர்ந்த நிலையில்... சாய்ந்தவர் சாய்ந்த நிலையில்... கிடந்தார்கள் காலையில் பார்த்தபோது. என்ன பேசினோம், எப்போது முடித்தோம், எப்போது தூங்கினோம். யாருக்குத் தெரியும். ஆஹா... அந்த இரவு சொர்க்க இரவு... அந்த இரவு 1001 இரவுகளில் ஒரு இரவு... அந்த இரவு இனிதான ஏகாந்தத்தையும் மீறிய இரவு...

ஞாயிறு காலை நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள உலகப்புகழ் வேடந்தாங்கலுக்குப் போனாம். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் பகுதியில் இந்த ஆண்டு சரியான மழை இன்மையால் ஊரே காய்ந்திருந்தது. அதனால் பறவைகள் தங்கும் வேடந்தாங்கல் பகுதியில் நீர் இன்மையால் பல பறவைகள் வெளிநடப்பு செய் திருந்தன. பார்வையாளர்கள் பரிதவிப்பும் ஏங்கும் கண்களும் ஏமாற்ற முகமும் வறட்சியின் வெளிப் பாடுகள். >சரி, இப்போது கொஞ்சம் வேடந்தாங்கலைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல் கின்றன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர்ப் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதைக் கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். வேடந்தாங்கல் என்றால் ‘வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1897 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்ற ஆங்கிலேயர் வேடந்தாங்க லைப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார். அதிலிருந்து இந்த இடம் வனத்துறையின் வசம் வந்திருக்கிறது. பறவைகளுக் குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இவ்விடத்திற்கு வரும் பறவைகளில் நீர்க்காகங் கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை. கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

வேடந்தாங்கலுக்குப் பல நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வரும் பறவைகள் அனைத்தும் இங்கு இனப்பெருக்கம் செய்வதில்லையாம். ஏனெனில், ஒரு பறவை இனம் எங்கு இனப்பெருக்கம் செய் கின்றதோ அதுவே அதன் தாய்நாடு.

வேடந்தாங்கலுக்கு வரும் ஐரோப்பியப் பறவை யினங்களான ஊசிவால் வாத்து (Northern pintail), உள்ளான் (Common sandpiper), பழுப்பு வாலாட்டி (Grey wagtail), Blue & winged teal போன்றவை ஐரோப்பியக் குளிரைத் தவிர்ப்பதற்காக பலவிடங் களுக்குச் செல்லும்; வழியில் இங்கும் வந்து செல் லுமாம்.

உலகமே கொண்டாடும் தீபாவளித் திருநாளில் இவ்வூர் மக்கள் பறவைகளின் பாதுகாப்பைக் கருதி பட்டாசு வெடிப்பதில்லை என்ற செய்தி கேட்டதும் மெய்சிலிர்த்தது. அவ்வூர் மக்களுக்கு சல்யூட்.

2014ஆம் ஆண்டில் மட்டும் 35,000 பறவைகளுக்கு மேல் இங்கு வந்து சென்றுள்ளன. அதோடு 1,45,212 மக்கள் வந்து பறவைகளைக் கண்டு சென்றுள்ளனர். இந்த ஆண்டு பறவைகளின் வரத்து மிகக் குறைவு. இருந்தாலும் புகழ்பெற்ற இடத்தில் கால்பதித்த திருப்தி. அன்று மதியம் கிளம்பி மாலை வந்து வீட சேர்ந்தோம். இந்தப் பயணத்துக்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த லதானந்த் அவர்களுக்கு நன்றி.

Monday, April 7, 2014

அதிரப்பள்ளி சுற்றுலா - மார்ச் 30, 31 - 2014


உதிரம் குளிரும் அதிரப்பிள்ளி

ஊர் சுற்றும்குழு ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு முறை இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். இந்த ஆண்டு 2014ல் முதல் இடமாக கேரளாவுக்குப் பயணப்பட்டோம். நாங்கள் எல்லாம் ஒரு வாரப் பத்திரிகையில் வேலையிலிருப்பதால் பொது விடுமுறையில்தான் பயணப்பட வேண்டிவரும். அதனால் முன்னாலேயே விடுமுறை நாளை உத்தேசித்து திட்டமிட வேண்டும். எதிர்பாரா விதமாக விடுமுறை நாளில்  வேலை வைத்துவிட்டால் கேன்சல்தான். சுமார் 15 லிருந்து 20 பேர் குழுவாக அமையும். ஒவ்வொன்றும் ஒரு அவதாரம். டூர் எப்படி இருக்கும்? ஜாலிதான்.

மார்ச் மாதம் 29ஆம் தேதி கேரள மாநிலம்  திரிச்சூர் மாவட்டம் சாலக்குடியிலிருந்து 5 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ‘இந்தியாவின் நயாகரா’  என்றழைக்கப்படும் அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிக்குப் போனோம். பொதுவாக கேரளா என்றாலே சில்வென்ற குளிர் இருக்கும் என்று நாங்கள் பல பேர் போர்வையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் ஏமாந்து போனோம். அவ்வளவு வெக்கை. Silver Storm water theme park-ல்தான் அட்வான்ஸாக அறையை புக் செய்தோம். காலை டிபனை முடித்து விட்டு நீர்வீழ்ச்சிக்குப் போகும்வழியில் வழியில் தென்பட்டது ஒரு கள்ளுக்கடை. ஓரிருவரைத் தவிர அனைவரும் மூங்கில் தொன்னையில் (ஒரு லிட்டர்)  கள்ளுண்டோம். சைட்டிஸ் மாட்டுக்கறி. கப்பக்கிழங்கு புட்டு. ஆஹா மாட்டுக்கறிக்கு அதிரப்பிள்ளி டேஸ்ட் தனி ருசிதான். முயல் கறி இருக்கு. ரொம்ப நல்லாருக் கும் என்றார்கள். ஏனோ யாரும் ஆர்டர் செய்ய வில்லை. மலையாளிகள் அனைவரும் தமிழை நன்றாகப் பேசுகிறார்கள். தமிழகச் சுற்றுலாவினர்கள் அதிகம் வருகிறார்கள்.  அங்கு சில்லறைக்கு ரோம்பத் தட்டுப்பாடு. சில்ல றையாகக் கொடுக்காவிட்டால் சில்லறைத்தனமாகக் கத்துகிறார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள். ஒரு வழியாக 12 மணியளவில் நீர்வீழ்ச்சியில் கால் வைத்தோம். நயாகராவுக்கு ஒப்பான நீர்வீர்ச்சியில் குளிக்க முடியாது. வானத்திலிருந்து ஒழுகுவதைப்போல நீண்ட உயரத்திலிருந்து கொட்டுகிறது பேறிரைச்ச லுடன். அதனால் நீர்வீழ்ச்சி உற்பத்தியாகி ஓடும் இடத்தில் குளிந்தோம். வெறும் ஜட்டியோடுதான் எல்லாம் குளித்தோம். அப்படி குளிப்பதன் சுகமே தனிதான். கடும் பாறைகள் பல்லாண்டுக்கணக்கான நீர் ஓட்டத்தில் தேய்ந்து வழுவழுப்பாக இருந்தது. கடும் வெயிலுக்கு இதமாக இருந்தது தண்ணீர். நீருக்குள் பாதங்களைப் பார்த்து வைக்காவிட்டால் ஆழமான இடத்தில் கால் மாட்டிக் கடும் வலி ஏற்பட்டுவிடும். நண்பர்கள் இருவருக்கு அப்படி ஏற்பட்டுவிட்டது. பாவம் அன்றைய நாள் முழுவதும் நொண்டியே நடந்தார்கள். மாலை 5 மணி வரை நீர்க் குளியல் முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். இரவு வட்டமேஜை மாநாட்டில் சோம பானத்துடன் உணவு பரிமாறப்பட்டது. நல்ல திருப்தியான விருந்து. இரவு சிறு சலசப்புக்குப் பின் நித்திரை கலைந்தது.

கட்டன்சாயா கேரளாவுக்கே உரிய தேநீர்பானம். பால் கலக்காமல் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி கலந்திருப்பார்கள். வழக்கமான டீக்கு பதில் அந்தச் சுவை பிடித்திருந்தது.  ஒரு சிலரைத் தவிர அனைவரும் குடித்தோம். அங்கு எல்லோரும் காலையில் 2 வாழைப்பழமும் கட்டன்சாயாவும் சாப்பிடுகிறார்கள்.  ஆப்பமும் கடலைக்கறியும், முட்டைக்கறியும் காலை டிபன். சுமார் சுவை. நம்ம ஊர் (சென்னை) வழி வராது. வாழைப்பழ பஜ்ஜி வித்தியாசமானது. நீர்த் தடத்தில் குளித்துவிட்டு நீர்வீழ்ச்சிப் பார்க்கச் சென் றோம். அதற்குக் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் பள்ளத்தில் இறங்க வேண்டியிருந்தது. அதுவும் மிகவும் இறக்கமான பாதை. மண் மற்றும் கல் பாறைகள், மரஞ்செடிகளுக்கிடையே நடக்கவேண்டும். அல்ல, ஓட வேண்டும். கீழே போவது பெரிதல்ல, மேலே ஏறுவதுதான் கடினமானது. எங்கள் குழு ஒருவருக்கு வெயிலின் காரணமாகவும் உணவு சரியின்மையாலும் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டு மேலேயே தங்கி விட்டார். நல்ல வேளை, இல்லாவிட்டால் அவரால் ஏறுவது சிரமம்தான். ஒரு வழியாக அனைவரும் மேலேறி மதிய உணவை பால்ஸ் அருகிலேயே ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்தோம். சாப்பாடு, சப்பாத்தி, சிக்கன், மட்டன் என பல ஐட்டம். சோறு கனமான பெரிய அரிசி, சாப்பார், ஒரு பொரியல். அங்கே ஆப்பம் என்று கொடுத்ததை இவர்கள் தோசை என்ற பெயரில் கொடுத்தார்கள். அதற்கு அதே கடலைக்கறி. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து அறைக்குக் கிளம்பினோம்.

கேரளாவில் எங்கும் (99%) போதைப் பொருட் களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அதை அங்குள்ள கடைக்காரர்களும் மற்றவர்களும் கடைப்பிடிக்கிறார் கள். ஹான்ஸ், பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மது கூட உரிமை வாங்கி வைத்துள்ள எங்கோ ஒரு இடத்தில்தான். அதுவும் ஒருவருக்கு ஒரு பாட்டில்தான் வழங்கப்படுகிறது. மதுவின் வருமானத்தில் ஆட்சி நடத்தும் தமிழகத்தை நினைத்தால் வேதனைதான் மிஞ்சும்.30ம் தேதி காலை உணவுக்குப் பின் அதிரப்பிள்ளி யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள  வழிச்சல் நீர் வீழ்ச்சிப் புறப்பட்டோம்.

சாலக்குடி மலைப் பிரதேசம். அங்கு தொழிற்சாலையோ, விவசாயமோ பெரிய அளவில் இல்லை. பெரும்பாலான நிலங்களில் பாமாயில் எண்ணெய் எடுப்பதற்கு பாயில் மரம் பயிரிட்டு வளர்ந்திருக்கிறது. கேரளாவுக்குப் புகழ்பெற்ற தென்னை மரங்களே மிகவும் குறைவு. வறண்ட பகுதியில் சுவை உணவும் மற்ற வசதிகளும் எதிர்பார்ப்பது  தவறுதானே. நாங்கள் இருந்த பகுதியிலிருந்து வழிச்சல் நீர்வீர்ச்சிக்குப் போக வாகன வசதியில்லை. ஆட்டோவோ, வேனோ கிடைக்குமா என்று பார்த்தோம். கிடைக்கவில்லை. நடந்தே போகலாம் என்றால் 5 கி.மீ. நடக்க முடியாது. (அப் அன்ட் டவுன் 10 கி.மீ.) இரண்டு நாள் சுற்றிய களைப்பு வேறு. மீண்டும் அறைக்கு வரும் வழியில் பார்த்தால், அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சி வெள்ளமாக ஓடிக்கொண்டே இருக்கிறது வழி எங்கும். அங்கு ஒரு இடத்தில் நாங்கள் சிறு குழுவாகப் பிரிந்து இறங்கிக் குளித்தோம். ஆஹா அற்புதம். எங்களுக்காகவே அந்த நீர்வீழ்ச்சியின் ஓட்டம் அமைக்கப்பட்டதாகவே உணர்ந்தோம். அவ்வளவு அருமையான ஜல தியானம் செய்தோம். தலை மட்டுமே வெளியே உடல்கள் 

நீரில். வெளியே கடும் வெயில். உள்ளே குளிர். ‘மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போலே’ என்றாரே கவியரசர் கண்ணதாசன் அதுமாதிரியான ஒரு சுகானுபவம். நினைக்க நினைக்க இனிக்கும் நீர்க் குளியல். மூன்று மணிவரை நனைந்துவிட்டு நேரமின்மை காரணமாக அறைக்கு நதியைவிட்டு அகல மனமில்லாமல் கிளம்பினோம். அறைக்கு வந்து அவரவர் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம். மனம் அதிரப்பிள்ளியில்... உடல் சென்னையை நோக்கி... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் ஒலியில் கரைந்தது 
நீர்வீழ்ச்சியின் சல...சல...சல... இயற்கையில் சலங்கை ஒலி.

Saturday, September 14, 2013

திரு.சக்திவேல் அவர்களுக்கு send off செய்தபோது...

அனைத்து ஃபோட்டோவையும் பார்க்க.... ஃபோட்டோமீது Click செய்யவும்