Wednesday, August 19, 2015

பார்சன் வேலி - ஆகஸ்ட் 15, 16 - 2015

<<<< Click on Photo to see all images >>>

 Parson Valley

பார்சன் வேலி

டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன், செல் : 9344773499

இயற்கைக் காட்சிகள் நிறைந்த உலகச் சிறப்பு மிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள இடங்களில் ஒன்றுதான் பார்சன் வேலி. அடர்ந்த இயற்கைக் காடுகளைச் சுற்றிலும் கொண்டு பல விதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்களைக் கொண்டு விளங்குகிறது . தூய்மையான காற்றினைக் கொண்டுள்ளது. பனிபடர்ந்த மேகக் கூட்டத்தினையும் கொண்டு எழில் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஆங்கிலேயப் பொறியாளர் பார்சன் ஹட்சன் என்பவர் 1862 இல் இந்த அழகான இடத்தைத் தேர்வு செய்து பாதை அமைத்து வழி ஏற்படுத்தித் தந்ததால் அவரது பெயரால் பார்சன் வேலி (Parson Valley) என அழைக்கப்படுகிறது.

குளிர் காலங்களில் மிகுந்த குளிரினையும், மழைக் காலங்களில் மிகுந்த மழையினையும், வெப்ப காலங்களில் குறைந்த குளிரினையும் கொண்ட சூழலைக் கொண்டு விளங்குகிறது.

கோயமுத்தூர் அல்லது ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று ஊட்டியை அடைய வேண்டும். ஊட்டியில் மாவட்ட வன அதிகாரியிடம் அனுமதி பெறுதல் வேண்டும். செல்ல வேண்டிய இடம், தங்கும் இடம், வழிகாட்டி போன்றவற்றிற்கு அனுமதிக் கடிதம் பெற்று செல்ல வேண்டும். இல்லையெனில் உள்ளே வனத்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள். மாலை அல்லது இரவு வேளையாயின் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரும்.

பார்சன் வேலியானது ஊட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எழில்மிகு காப்புக்காடாகும் (Reserved Forest), போகும் வழியின் இரு பக்கமும் அடர்ந்த காடும் சிறு சிறு நீரோடைகளும் கண்டு கடந்து செல்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகும். காட்டெருமைகள் (Fearl Bufflalo), கலைமான்கள் (Sambar Deer) காட்டு மாடு (Gaur) சில வேளைகளில் சிறுத்தை போன்றவற்றை வழியில் ஆங்காங்கே காணலாம். இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதியாக விளங்குவதால் ஒளிப்படம் எடுப்பவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்களுக்கும் ஏற்ற இடமாகும்.

தோடா பழங்குடி மக்களையும், வேளாண்மை நிலங்களையும் பார்சன் வேலியின் சுற்றுப்பகுதிகளில் காணலாம். பார்சன் பள்ளத்தாக்கு செல்லும் வழியில் போர்த்துமண்டு அணை (Porthimund Dam), முக்கூர்த்தி ஏரி போன்றவற்றினைக்கண்டு இன்புற லாம். பார்சன் பள்ளத்தாக்குப் பகுதியில் பல நீரோடைகளும், சிறிய நீர் வீழ்ச்சிகளும் அமைந்துள் ளன. இவை காண வேண்டிய பகுதியாகும்.

இப்பகுதியில் பைன் மரங்கள் (Pine Trees) ஆங்காங்கே அடர்த்தியாகப் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலும், திறந்த வெளிகளிலும் அமைந்து எழில் மிக்க இயற்கைக் காட்சியாகத் தோற்றமளிக்கிறது.

பார்சன் வேலி நீர்பிடிப்புப் பகுதி 202 ஹெக்டேர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 2196 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. ஊட்டி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள கிராமங்களுக்கு இங்கிருந்துதான் குடிநீருக் கான நீர் அனுப்பப்படுகிறது. தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் ஏரி நிரம்பிவிடும்.

வனத்துறையின் ஓய்வு இல்லம் இங்குள்ளது. மேலும் சுமார் 30 பேர் தங்கும் அளவிற்கு பெரிய அறை ஒன்றும் உள்ளது, நடந்து மலை ஏறுபவர்கள் (Trecking) எண்ணிக்கையில் அதிகம் பேர் இருப்பின் ஓய்வு இல்லத்தின் முன் திறந்த புல் வெளியில் கூடாரம் அமைத்து தங்கவும் அனுமதிக்கின்றனர். கூடாரம் ஊட்டியில் வாடகைக்கு கிடைக்கிறது.

முக்கூர்த்தி தேசியப் பூங்காவின் ஒரு பகுதிதான் பார்சன் வேலி. பாண்டியாற்றின் சரிவில் அமைந்துள்ளது. செல்லும் வழியில் சிறிய நீர் வீழ்ச்சிகள் பலவும், நீர் தேக்கங்கள், பல வகையான பறவைகள், உயிரினங்கள் காணக் கூடிய பகுதியாக விளங்குகிறது. மலை ஏறுபவர்கள் வழிகாட்டிகளை உடன் அழைத்துக்கொண்டு சுற்றியுள்ள பல இடங்களுக்கு குறிப்பாக ஊட்டியிலிருந்து பார்சன் வேலிக்கும், இங்கிருந்து முக்கூர்த்தி மலைச் சிகரத்திற்கும் நடந்து செல்லலாம். ஏப்ரல் - ஜூன் மற்றும் செப்டம்பர் - டிசம்பர் மாதங்கள் நடந்து மலை ஏறுபவர்களுக்கு ஏற்ற மாதங்களாகும்.

நடந்து செல்லும்பொழுது பலவிதமான காட்டுயிர்களைக் காணலாம். அவற்றில் கருங்குரங்கு, காட்டுப் பூனை, செங்கீரி (Ruddy Mongoose), காட்டெருமை (Fearl Buffalo), காட்டுமாடு (Gaur), கலைமான் (Sambar), சிறுத்தை மற்றும் சில நேரங்களில் புலி போன்ற வைகளையும் (இப்பகுதிகளில் யானையினைக் காண்பதென்பது மிகவும் அரிது. எப்போதாவது தான் இப்பகுதிகளுக்கு வருகிறது.)

பறவைகப்ளில் நீர் நிலைகளில் நீர் காகம், வெள்ளைக் கொக்கு போன்றவைகளும் நீலகிரி பூங்குருவி (Scally Thrush), வெள்ளைக் கண்ணி (Oriental White), கருப்பு சின்னான் (Black Bulbul), சிவப்பு மீசைச் சின்னான் (Red & whiskerd Bulbul), சின்னான் (Red & vented Bulbul), தேன் சிட்டு, தகைவிலான் (Swallow) போன்ற பறவைகள் எப்பொழுதும் காணக் கூடியவைகள். வலசை வரும் பறவையான காஷ்மீர் ஈ பிடிப்பான் போன்றவைகளையும் சில காலங்களில் காணலாம்.

மழைக்குப்பின் ஆர்கிட் பூக்கள் தோன்றியிருக்கும் பகுதிகளுக்கு இவை பற்றி தெரிந்தவர்களை உடன் அழைத்துச் சென்றால் எளிதில் காணலாம். மற்றும் அழகிய வண்ணப் பூக்கள் சில ஒன்று சேர்ந்தும் சில வகைப் பூக்களை ஆங்காங்கே காணலாம். பல வகையான காளான்கள், அவற்றில் சில காண்பதற்கு அழகிய வண்ணங்களில் தோற்றம் அளிந்த்தாலும் விசத்தினைக் கொண்டிருக்கும். உணவுக்கு ஏற்றதல்ல.
மழைக்காலங்களில் அட்டைப் பூச்சிகள் (Leech) அதிகளவில் இருக்கும். கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும். காரணம் இவை உடலில் இரத்தத்தைக் குடிப்பதற்காக கடிக்கும். இதனை நம்மால் உணர முடியாது. இரத்தத்தைக் குடித்து முடித்தபின் அவ் விடத்திலிருந்து இரத்தம் வடிவதைக் கொண்டுதான் உணர முடியும்.

பார்சன் வேலி பகுதிகளிலிருந்து 30 கி.மீ சுற்றள வில் பார்க்கக்கூடிய இடங்கள் அப்பர் பவானி, எமரால்டு, அவலான்சி, போத்தி மண்ட், முக்கூர்த்தி போன்ற ஏரிகளும், திறந்த புல்வெளிப் பகுதியும் மற்றும் நீர் தேக்கம் கொண்ட வெஸ்டேன் கேட்ச் மென்ட், முக்கூர்த்தி சிகரம் குறிப்பிடத்தக்கதாகும் இப்பகுதியில் வரை ஆடு (Nilgiri Tahr) களைக் காணலாம். தற்போது முக்கூர்த்தி மற்றும் வெஸ்டேன் கேட்ச் மென்ட் பகுதிகளுக்கு வனத்துறையினர் அனுமதி கொடுப்பதில்லை. சிறப்பு அனுமதி பெற்றால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

இப்பகுதியில் அமைந்துள்ள புல் வெளிகள் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரினை சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால் (ஸ்பான்சு போன்று) வெப்ப காலங்களில் சேமித்து வைத்திருக்கும் நீரினை சிறிது சிறிதாக வெளியேற்று வதால் அப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் ஆண்டு முழுவதும் நீர் ஓடுவதற்கு முக்கிய காரண மாக இப் புல்வெளிப் பகுதிகள் விளங்குகின்றன. இவ்வழகு நிறைந்த இப்பசுமைக் காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு ஆண்டு முழுவதும் பயணிக்கலாம். இப்பகுதி முழுவதும் தூய்மை நிறைந்ததாகும். எனவே இப்பகுதிகளுக்குச் செல்பவர்கள் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் பொருள்களையும், பாட்டில்களையும் உற்சாகக் களிப்பில் திகழ்வதற்காக மது அருந்துவதையும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

நன்றி : படங்கள், கட்டுரை : ஒளிஓவியர் திரு. அருந்தவச்செல்வன்

No comments:

Post a Comment